வதோதரா: இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்று பாதிப்பால் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாகவும், நோய் தொற்று அறிகுறியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்ற எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை மூன்றுபேர் பலியாகி உள்ளனர். குஜராத்தின் வதோதராவை சேர்ந்த 58 வயதான பெண், எச்3என்2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் காரணமாக அரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்கனவே இரண்டு நோயாளிகள் இறந்துள்ளனர். பல மாநிலங்களிலும், மேற்கண்ட இன்ஃப்ளூயன்ஸா தொற்று அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, எச்3என்2 என்பது இன்ஃப்ளூயன்ஸாவின் துணை வகை வைரஸ் தொற்றாகும்.
இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலில் முதலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன்பின் நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படத் தொடங்கும். உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் மரணத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.