Zoho நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மனைவி பிரமிளா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான செய்தி சர்வதேச அளவில் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழில் வெளியானது. மேலும் வழக்கறிஞர் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு தனது ட்விட்டரில் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்டிசம் குறைபாடு
அதில், ஆட்டிசம் எங்கள் வாழ்வை பெரிதும் புரட்டி போட்டது. என்னை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு கொண்டு போனது. எனது மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் குறைபாட்டால் நானும், மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேல் போராடினோம். என் மனைவி பிரமிளா ஒரு Super Mom. அவரது ஒரே குறிக்கோள் மகனின் குறையை போக்குவது தான். அவருடன் சேர்ந்து நானும் பெரிதும் பாடுபட்டேன்.
என் மகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நானும் அறிந்திருந்தேன். எங்களால் முடிந்த சிகிச்சைகள் அனைத்தையும் அளிக்க முயற்சித்தோம். ஆனால் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. எனவே இந்தியாவிற்கு திரும்பி கிராமப்புறங்களில் வசித்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அங்கு அடித்தட்டு மக்களை மேம்படுத்த முயற்சிக்க திட்டமிட்டேன்.
திருமண வாழ்க்கை
இந்த எண்ணத்தால் எனது மனைவியையும், மகனையும் கைவிடுவதாக நினைத்து கொண்டார்கள். இதனால் எங்கள் திருமண வாழ்க்கை பாதிப்பிற்கு ஆளானது. தற்போது புதிய திருப்பங்களுடன் எங்கள் திருமண வாழ்வு முடிவுக்கு வந்திருக்கிறது. ஜோஹோ நிறுவனத்தில் என்னுடைய பங்களிப்பு குறித்து தவறான தகவல்களை பிரமிளா முன்வைத்துள்ளார். இதுபற்றி நீதிமன்றத்திலும், ஊடகங்களிலும் முறையிட்டார்.
தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக கூறுகிறேன். ஜோஹோ நிறுவனத்தில் இருந்து என்னுடைய பங்குகளை வேறு யாருக்கும் மாற்றவில்லை. 27 ஆண்டுகால வாழ்க்கையில் முதல் 24 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தேன். அங்குள்ள சட்டத்தை மதித்து நடந்தேன். அதேபோல் இந்தியாவிலும் உரிய சட்ட திட்டங்களின் படியே நிறுவனத்தை கட்டமைத்தேன்.
நீதிமன்ற வழக்கு
பிரமிளா மற்றும் எனது மகனை பொருளாதார ரீதியாக கைவிட்டு விட்டேன் என்பதெல்லாம் கட்டுக் கதை. என்னை விட அவர்கள் வசதியுடன் தான் இருக்கின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். அமெரிக்காவில் என்னுடைய கடைசி 3 ஆண்டுகால சம்பளம் அவர்களிடம் தான் இருக்கிறது. என் வீட்டையும் அவருக்கே கொடுத்து விட்டேன். பிரமிளாவின் பவுண்டேஷனையும் ஜோஹோ நிறுவனம் தான் பின்புலமாக இருந்து செயல்படுத்தி வருகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் எனது மாமா ராம் தான். அமெரிக்காவில் வசித்து வரும் அவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையானதை செய்து கொடுத்தேன். ஆனால் தற்போது எனக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் எங்கள் குடும்பத்துடன் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டார். எந்தவித தகவல் தொடர்பும் இல்லை.
மாமா ராம்
சில ஆண்டுகளுக்கு முன்பு கலிஃபோர்னியாவிற்கு அழைத்து எங்களுடனேயே வசிக்குமாறு அறிவுறுத்தினேன். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு மற்றும் அவர் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அப்படி செய்தேன். எங்களுக்கு ஒரு சிறு துரும்பை கூட மாமா ராம் புரட்டி போட்டதில்லை.
இவருடன் சேர்ந்து கொண்டு பிரமிளா எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தற்போது எங்களது அமெரிக்க வீட்டில் தான் வசித்து கொண்டிருக்கிறார். என் மனைவி ஆட்டிசத்திற்கு எதிராக போராடி போராடி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால் தான் அவரை நான் கைவிட்டு விட்டதாக நினைக்கிறார். ஆனால் பிரமிளா மற்றும் மகனுக்கு போதிய விஷயங்களை தொடர்ந்து செய்து கொடுப்பேன்.
கடைசி வரை இப்படித்தான்
எனது உயிருள்ள வரை செய்வேன். உண்மையும், நீதியும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமப்புற இந்தியாவில் நிறுவனங்களை கட்டமைத்து பலம் வாய்ந்ததாக மாற்றும் எனது முயற்சி தொடரும். இதுதான் எனது எஞ்சிய வாழ்வின் ஒரே குறிக்கோள். ஒருநாள் என் மகன் என்னுடன் வந்து சேருவான் என்ற நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.