சென்னை: சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு 600 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. “இந்த அறிக்கையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தினால், இதற்கான பலன்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் உறுப்பினர்களான ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட நியமிக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்பித்தது. இதன்படி தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இக்குழுவின் இறுதி அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (பிப்.14) தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது. ஆலோசனைக் குழுவின் தலைவர் திருப்புகழ் இறுதி அறிக்கையை அளித்து, அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- 11 அத்தியாயங்களுடன் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக இது தயார் செய்யப்பட்டுள்ளது.
- மழைக்கு முன்பு தொடங்கி மழை முடிந்த நிறைவு பெறுவது வரை செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
- அடுத்த 30 ஆண்டுகளை கணக்கில் கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
- ஒரு நிலபரப்பின் தன்மையை ஆய்வு செய்து, அதற்கு ஏற்றது போல் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அறிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.
- இயற்கைப் பேரிடர் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிவிப்பது (early warning system) தொடர்பான விரிவாக ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது.
- உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது அனைத்து துறைகளுக்கு இடையிலும் இருக்க வேண்டிய ஒருங்கிணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளம் மற்றும் வெள்ள பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஆட்சியர்கள், பல்துறை நிபுணர்கள், வெளி நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் உள்ளிட்ட என்று அனைத்தையும் ஆய்வு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த குழுவில் இடம்பெற்றுள்ள WRI இந்தியா அமைப்பின் Climate Resilience Practice பிரிவு இயக்குநர் அறிவுடை நம்பி அப்பாதுரை கூறுகையில், “சென்னையின் வெள்ளத் தடுப்பு மேலாண்மை பணிகள் தொடர்பான விரிவான ஆய்வு அறிக்கையாக இது தயார் செய்யப்பட்டுள்ளது. ஆதாவது, ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை (end to end ) அனைத்துக்கும் தீர்வு கானம் வகையில் ஆய்வு செய்யப்பட்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்க வேண்டிய தொடர்புகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் தவிர்த்து தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் படி செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்தும் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தினால் இதற்கான பலன்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்” என்று அவர் கூறினார்.