“அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்" – அமைச்சர் உதயநிதி

“அதிகாரிகள் அரசு திட்டப்பணிகளை விரைந்து சிறப்பாக செயல்படுத்தினால் மட்டுமே அரசுக்கு நல்லப் பெயர் கிடைக்கும்” என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவி வழங்கிய
உதயநிதி

உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று தஞ்சாவூர் வந்தார். அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட அனிதா நினைவு அரங்கம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்த உதயநிதி பின்னர், தஞ்சாவூர் வந்தார். மாவட்ட எல்லையான திருவையாறு கொள்ளிடம் பாலமான விளாங்குடியில் அவருக்கு தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

காலை 11 மணிக்கு உதயநிதி வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வருவதற்கு தாமதமானது. கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் கட்சியின் சீனியர்கள் சிலர், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதை குறித்து புலம்பியதை கேட்க முடிந்தது. திருவையாறு ஐயாறப்பர் கோயில் யானை தர்மாம்பாளையை, உதயநிதியை வரவேற்பதற்காக அழைத்து வந்திருந்தனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்கும் யானை

சாலையோரத்திலே இரண்டு மணி நேரத்துக்கு மேலாக யானையை நிற்க வைத்திருந்தனர். நேரம் ஆகஆக யானை பாகன் யானையை சமாளித்து ஆசுவாசப்படுத்த படாதபாடு பட்டார். ஒரு வழியாக வந்து சேர்ந்த உதயநிதி நேராக மேடைக்கு சென்றார் பின்னர் நிர்வாகிகள் அவரை வரிசையில் சென்று வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாநகர தி.மு.க சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உதயநிதி வந்த காரின் மீது மலர்தூவி வரவேற்றனர். இதையடுத்து அண்ணா சத்யா ஸ்டேடியத்தில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்ட நடைபயிற்சி நடைபாதைக்கான மின்விளக்குகளுடன் கூடிய தார்சாலை, ரூ. 2 கோடியில் அமைக்கப்பட்ட திறந்தவெளி ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

உதயநிதி

இதற்காக அழைத்து வரப்பட்ட ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் பல மணி நேரமாக காக்க வைக்கப்பட்டதால் சோர்வடைந்தனர். இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா படத்தை திறந்து வைத்தார். பின்னர் சங்கம் ஹோட்டலுக்கு சென்று மதிய உணவு முடித்து ஓய்வெடுத்த பிறகு விட்டு மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பழங்குடியின பெண்கள் நடத்துகிற மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் நவரத்தின கற்களில் செய்யப்பட்ட மணியை உதயநிதிக்கு அணிவித்தார். பின்னர் ஆய்வு கூட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்று வருகிற திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இதில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை.

உதயநிதி, அன்பில் மகேஷ்

தஞ்சாவூரில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இரண்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாராம் உதயநிதி. அதிகாரிகள் சிலரிடம் முடிக்கப்படாத திட்டங்கள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஏன் முடிக்கவில்லை, எப்போதும் முடிப்பீர்கள் எதனால் பணிகள் தாமதமாகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகள் அரசு திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அரசுக்கு நல்லப் பெயர் கிடைக்கும். முதலமைச்சர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டமாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.