அமலாக்கத்துறையின் விசாரணை சம்மனுக்கு தடைகோரி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு புகார் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, கவிதாவிடம் அமலாக்கத்துறை கடந்த 11 ஆம் தேதி விசாரணை நடத்தியது.
மீண்டும் நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் கவிதா தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பெண்களை அழைத்து விசாரிக்கக்கூடாது எனவும், சட்டத்தின்படி, வீட்டில் வைத்தே விசாரிக்க வேண்டுமெனவும் கவிதா தரப்பு வழக்கறிஞர் அப்போது வாதிட்டார்.