ஆஸ்கர் விருது பெருமையை பாஜ அபகரித்து விடக்கூடாது: கார்கே பேச்சால் மாநிலங்களவையில் சிரிப்பலை

புதுடெல்லி: இந்திய திரைப்படங்கள் 2 ஆஸ்கர் விருது வென்ற பெருமையை பாஜ அபகரித்து விடக்கூடாது, மோடி தான் படத்தை இயக்கினார் என்றெல்லாம் சொல்லி விடக் கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதால் மாநிலங்களவையில் சிரிப்பலை ஏற்பட்டது. ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும், ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ தமிழ் ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் படக்குழுவினரை பாராட்டி பேசினர்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், ‘‘நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் எனது ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், ஆளும் கட்சியினர் இந்த பெருமையை அபகரித்து விடக்கூடாது. நாங்கள் தான் பாடலை எழுதினோம். மோடிஜிதான் படத்தை இயக்கினார் என்றெல்லாம் சொல்லிவிடக் கூடாது’’ என்றார். இதைக் கேட்டு அவைத்தலைவர் தன்கர் உட்பட அனைத்து எம்பிக்களும் சிரித்து விட்டனர். பாஜ எம்பிக்களும் தங்களை அடக்க முடியாமல் சிரித்தனர். முன்னதாக, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் சமூக ஊடகத்தில், ‘ஆர்ஆர்ஆர் படத்தின் கதாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத்தின் திறமையை முன்கூட்டி பிரதமர் மோடி அடையாளம் கண்டு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்திருந்தார்’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கார்கே கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

* பிராண்ட் இந்தியா
மாநிலங்களவையில் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், ‘‘இந்தியத் திரையுலகம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது நாட்டிற்கு பெருமை. பிராண்ட் இந்தியா வந்துவிட்டது, இது ஒரு ஆரம்பம்தான். உலகின் கதைக்கள மையமாக இந்தியா மாறும் சாத்தியம் உள்ளது. அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.