இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு திருடன் தனது குற்றச் செயலில் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததால், அவர் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தந்தது மட்டுமல்லாமல், மன்னிப்புக் கடிதத்தையும் திருடப்பட்ட பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் விட்டுச் சென்றது பேசுபொருளாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள கனாக்கில் உள்ள ஹியூஸ் இறுதி ஊர்வல சவப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் முகமூடி அணிந்த திருடன் அங்கிருந்த “சொர்க்கத்திற்கான போஸ்ட்பாக்ஸ்” என்று அழைக்கப்படும் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட பெட்டியை தூக்கி செல்வது கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
இந்த தபால் பெட்டியில் இறந்த அன்புக்குரியவர்களுக்கு உறவினர்கள் கடிதங்களை எழுதி வைப்பது வழக்கம் என்பதால், அந்த பெட்டி திருடுபோனாது உள்ளுர்வாசிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பெட்டியில் உணர்ச்சிகரமான கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் இறந்தவர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து எழுதப்பட்ட பல கடிதங்கள் இருந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அந்த நிறுவனத்தின் உரிமையாளரான 38 வயதான கிம் ஹியூஸ், தபால் பெட்டி போய்விட்டதை உணர்ந்தபோது தனது ‘இதயம் மூழ்கியது’ என்று கூறினார். சில குழந்தைகள் தங்கள் தாத்தாவுக்காக வரைந்த படங்கள்தான் திருடனுக்கு கிடைக்கும் என அவர் கூறினார். இந்த செய்தி சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல்தொடர்பு ஆதாரங்கள் மூலம் பரவியது. அதன்மூலம் திருடன் பெட்டியின் உண்மைத்தன்மையைப் பற்றி அறிந்து கொண்டார்.
இந்தச் செய்தியால், குற்ற உணர்ச்சியில் இருந்த திருடன் மனம் மாறி, திருடிய பொருளை மறுநாள் திருப்பிக் கொடுத்தான். சம்பந்தபட்ட Hughes Funeral Directors இந்த செய்தியை பேஸ்புக்கில் கடிதம் மற்றும் பெட்டியின் படங்களை உள்ளடக்கிய ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார்.
திருடன் தபால் பெட்டியை சேதப்படுத்திய பிறகு பெயிண்ட்டுக்காக 2 ஆயிரம் ரூபாய் (20 பவுண்டுகள்) விட்டுவிட்டு, “நான் ஒரு மோசமானவன்” என்று ஒப்புக்கொண்டு ஒரு கடிதம் எழுதினான்: “என் முழு மனதுடன், நான் மிகவும் வருந்துகிறேன்” என்று திருடன் கடிதம் எழுதி வைத்துள்ளான்.
“அஞ்சல் பெட்டியை எடுத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்; நான் எந்த கடிதத்தையும் அல்லது அது என்னவென்று எதையும் படிக்கவில்லை. அது எந்த வகையிலும் சரி ஆகாது. இது பற்றிய செய்தியை ஃபேஸ்புக்கில் பார்த்தபோது பெட்டியின் உண்மையை உணர்ந்தேன், நான் ஒரு கோழை, தாழ்ந்தவன்” என திருடன் தனது கடிதத்தில் கூறியுள்ளான்.