புதுடெல்லி,
இந்தியாவை ஒட்டியுள்ள வங்காளதேச நாட்டுடனான போரஸ் எல்லை பகுதி வழியே கால்நடைகளை கடத்தும் கும்பலின் செயல்பாடு தீவிரமடைந்து உள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உளவு பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. அதில், இந்தோ-வங்காளதேச எல்லை வழியே வங்காளதேசத்திற்கு கால்நடைகளை கடத்தும் கும்பல் அதற்கு ஈடாக பணத்திற்கு பதிலாக, தங்கம் பெற்று கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது..
இந்த தங்க கடத்தலால் பொருளாதார பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இந்த பண்டமாற்று முறையில் கிடைக்க கூடியவை பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் ஆயுதங்களை வாங்குவது போன்ற தேச விரோத செயல்களுக்கு பயன்பட கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கை தெரிவித்து உள்ளது.
சர்வதேச எல்ல பகுதியில் தங்கம் கடத்தப்படுவது பற்றி மேகாலயா போலீசாரும் பல வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து விசாரித்ததில், கால்நடைகளுக்கு ஈடாக தங்கம் பெற்று கொள்ளும் விவரம் தெரிய வந்து உள்ளது என மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அரசு தகவலின்படி, நடப்பு ஆண்டில் கடந்த 2 மாதங்களில் (ஜனவரி மற்றும் பிப்ரவரி) எல்லை காவல் படையால் இந்தோ-வங்காளதேச எல்லை பகுதியில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிய வந்து உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் பிடிபட்ட கடத்தல் தங்கம் 114.40 கிலோவாகவும், 2021-ம் ஆண்டில் பிடிபட்ட கடத்தல் தங்கம் 30.49 கிலோவாகவும் இருந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.