சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எமஎல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பிலும், ஈவிகேஎஸ் தரப்பிலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தொடர்ந்து பிப்.10 சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.