புதுடில்லி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் நோயாளிகள், தங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், எம்.பி., ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்து இருந்ததாவது:
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் நோயாளிகள், தங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில், ‘ஒரே நாடு; ஒரே கொள்கை’ என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
உடல் உறுப்பு தானம் பெறுவதற்கான விதிமுறைகளில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 65 வயதிற்கு உட்பட்டவர்களே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள தகுதியானவர்கள் என்றிருந்த விதிமுறை நீக்கப்பட்டு, இனி எந்த வயதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும்.
அனைத்து வயதினரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement