96 பட பாணியில் பள்ளிப்படிப்பை முடித்து 35 வருடங்கள் கழித்து பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 வயதை கடந்த ஜோடி ஒன்று வீட்டில் இருந்து மாயமானதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்…
96 படத்தில் பள்ளியில் படித்த மாணவர்கள் மீண்டும் பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்வது போலவும், சூழ் நிலையால் பிரிந்த பள்ளி பருவ காதலர்கள் தங்கள் உணர்வை நேரில் பகிர்ந்து கொண்டு மீண்டும் பிரிந்து செல்வது போலவும் கதை சொல்லப்பட்டிருந்தது. அதே போல 88 ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் ரீ யூனியனில் சந்தித்த 50 வயதை கடந்த ஜோடி ஒன்று நிஜத்தில் ஒன்றாக எஸ்கேப்பான கூத்து அரங்கேறி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த மாவுட்டு புழா பகுதியில் 35 வருடங்களுக்கு முன்பாக பள்ளியில் படித்து பிரிந்த நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வயது 50 ஐ கடந்து விட்ட நிலையில் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு தங்கள் குடும்பம் , தொழில் , வாழ்க்கை முறை குறித்து பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு திரும்பிச் சென்ற நிலையில் 50 வயதை கடந்த ஒரு தொழில் அதிபரையும், அதே வயதுடைய அவரது பள்ளித்தோழியையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
தொழில் அதிபருக்கு திருமணமாகி மனைவியும் திருமண வயதில் குழந்தைகளும் உள்ளனர். அவருடன் சென்றதாக கருதப்படும் அந்த பெண்ணுக்கு, கணவனும், திருமணமான பிள்ளைகள் உள்ளதாக தெரிவித்த போலீசார், வீட்டை விட்டு பறந்த அந்த fifty age காதல் ஜோடியை, அவர்கள் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வலை வீசி தேடி வருவதாக தெரிவித்தனர்.