ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்வதாக புகார் பள்ளி முன்பே பஸ்சை நிறுத்த வைத்த சபாநாயகர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

ராதாபுரம்: ஒரு கிலோ தூரம் நடந்து செல்வதாக மாணவர்கள் அளித்த புகாருக்கு உடனடியாக தீர்வு கண்டு, பள்ளி முன்பே பஸ்சை நிறுத்த அறிவுறுத்திய சபாநாயகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ராதாபுரம் அருகே இடிந்தகரை அருவிக்கரையில் ரூ.10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று காலை 9 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராதாபுரம் அருகே உள்ள சிதம்பரபுரம் ஊராட்சி வையகவுண்டன்பட்டி என்கிற கிராமத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி குழந்தைகள் அவரது காரை கைகாட்டி நிறுத்த முயன்றனர். இதை பார்த்த சபாநாயகர் உடனடியாக காரிலிருந்து இறங்கி குழந்தைகளிடம் சென்று நலம் விசாரித்து விவரம் கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள், ‘வையகவுண்டன்பட்டியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் சீலாத்திகுளம் அருகே 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படித்து வருகிறோம். தங்களை அரசு பஸ்சில் சீலாத்திகுளம் ஊரில் இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். அதில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நாங்கள் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த பேருந்து அவ்வழியாகவே செல்வதால் எங்களை பள்ளியில் நிறுத்தி ஏற்றி செல்லுவதற்கு உதவ வேண்டும்’ என்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, உடனடியாக நெல்லை அரசு போக்குவரத்து பொது மேலாளரை தொடர்பு கொண்டு சபாநாயகர் அப்பாவு பேசினார். அந்த சமயத்தில் பஸ் வந்தது. அப்போது பஸ் ஓட்டுநரிடம், ‘பள்ளியில் இருந்து தொலைவில் இறக்கி விட்டு செல்வதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்குள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சீலாத்திகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு பஸ்சை நிறுத்தி அவர்களை இறக்கிவிட வேண்டும். அதே போல் மாலை பள்ளி முன்பு பஸ்சை நிறுத்தி மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லுமாறும் அறிவுறுத்தினார். இது தொடர்பாக தான், உயர் அதிகாரியிடம் பேசியதாக ஓட்டுநரிடம் சபாநாயகர் தெரிவித்ததன் பேரில் உடனடியாக பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சபாநாயகருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.