கடத்தப்பட்ட தொழிலதிபர்; `ஃப்ளாப்' ஆன 10 கோடி ரூபாய் பிளான்…சிக்கிய கும்பல்! – என்ன நடந்தது?

தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அதிசியம் (68). இவர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, திராட்சை, தென்னை விவசாயம், மொத்த பிராய்லர் கோழி மற்றும் முட்டை வியாபாரம், பெட்ரோல் பங்க்குகள் என பல தொழில்கள் செய்து வருகிறார். 

கடத்தப்பட்ட அதிசியம்

ராயப்பன்பட்டி அருகே ஆனைமலையான்பட்டியில் தோட்டத்துக்கு டூவீலரில் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் அதிசயம். அப்போது எதிரே காரில் வந்து டூவீலரை மறித்த இருவர், அதிசயத்தை காரில் கடத்திச் சென்றிருக்கின்றனர். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அதிசியத்தின் மருமகனுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் மாவட்டத்தில் அனைத்து செக்போஸ்ட்டுகளையும் அலர்ட் செய்தனர். 

இதையடுத்து கடத்தியவர்கள் ஆண்டிபட்டி வழியாக மதுரை நோக்கி சென்றிருக்கின்றனர். அப்போது ஆண்டிபட்டி செக்போஸ்ட்டில் இருந்த எஸ்.ஐ சுல்தான் பாட்சா அதிவேகமாக வந்த காரை மறித்திருக்கிறார். ஆனால், நிற்காமல் வைகை புதூர் சாலை நோக்கி அந்த கார் வேகமாகச் சென்றது. அதையடுத்து, போலீஸார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றபோது, இடையே அதிசியத்தை இறக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பியிருக்கிறது. 

ஆண்டிபட்டி

வைகை அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார் டிரைவர் பிரபு (31), அஜித் (26), கெளசிகன் (26) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். இதற்கிடையே அதிசியம் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த சங்கரலிங்கம் (65) என்பவர் தோட்டத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “பிடிப்பட்ட 3 பேரும் கூலிக்கு வந்தவர்கள்தான். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் கிரசர் நடத்தி நஷ்டம் அடைந்திருக்கிறார். பிறகு கிடா, சேவல் சண்டைவிட்டு வந்திருக்கிறார். இவருக்கும் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன், அவருடைய நண்பர் ஜோதிபாஸ் ஆகியோருடன் சேவல் சண்டை விடுவதில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில் புவனேஸ்வரன் சேவல் சண்டை நடத்தி நஷ்டமடைந்து தற்போது டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அதிசியத்தின் தோட்டத்தில் வேலை பார்க்கும் சங்கரலிங்கம் தினமும் டீ குடிக்க வருவார். 

தேனி எஸ்.பி

இந்த நிலையில் திருப்பதி, புவனேஸ்வரன், ஜோதிபாஸ் ஆகியோர் சேர்ந்து ஆட்கடத்தல் செய்து பெரிய அளவில் பணம் பறித்து செட்டில் ஆக வேண்டும் என திட்டமிட்டிருக்கின்றனர். அப்போது யாரைக் கடத்தலாம் என நடந்த பேச்சுவார்த்தையில் கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கும் வயதான அதிசியத்தைக் கடத்தி 10 கோடி ரூபாய் கேட்கலாம் என முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கு சங்கரலிங்கத்தை உடந்தையாக வைத்துகொண்டு அதிசியம் எங்கெல்லாம் எத்தனை மணிக்குச் செல்வார் என்பது குறித்து கண்காணித்து வந்திருக்கின்றனர். 

கைது

இதையடுத்து ஆனைமலையான்பட்டி தோட்டத்துக்கு வந்த அதிசியத்தைக் கடத்த முடிவுசெய்திருக்கின்றனர். டவேரா காரில் சென்று டூவீரில் தனியாக வந்து கொண்டிருந்த அதிசியத்தை மறித்து கடத்தியிருக்கின்றனர். அப்போது டூவீலரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை இடித்து தள்ளிவிட்டு அதிவேகமாகச் சென்றிருக்கின்றனர். அவர் அதிசியத்தின் மருமகன் டேவிட் ஆனந்தராஜூவுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். சுதாரித்த கொண்ட டேவிட், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். 

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவுக்கு தகவல் கொடுத்து, மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்தோம். முதலில் தோட்டம் அருகேயுள்ள பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் டவேரா கார் சின்ன ஒவுலாபுரம் வழியாகச் சென்றதை அறிந்து, அந்த ரோட்டில் போலீஸாரை அனுப்பினோம். ஆண்டிபட்டி செக்போஸ்ட்டில் வைத்து எஸ்.ஐ சுல்தான்பாட்சா கடத்தல் காரை வழிமறித்திருக்கிறார். அவர்கள் நிற்காமல் அதிவேகத்தில் சென்றதால் அந்த காரை டூவீலரில் பின்தொடர்ந்திருக்கின்றனர். போலீஸார் விரட்டி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை நிறுத்தி அதிசியத்தை கீழே தள்ளிவிட்டுச் சென்றனர். காயமடைந்திருந்த அவரை மீட்ட எஸ்.ஐ, ஆம்புலன்ஸை வரவழைத்து தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். 

உயிரிழந்த சங்கரலிங்கம்

வைகை புதூர் வழியாக வடுகபட்டி நோக்கிச் சென்ற காரை, மேலகாமக்காபட்டியில் வைத்து தடுத்து நிறுத்தினோம். அதில் டிரைவர் பிரபு மட்டும் இருந்தார். அவரிடம் விசாரித்தபோதுதான், திருப்பதி, அழகுசுந்தரம், அஜித், கெளசிகன் உள்ளிட்டோர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலை வைத்து அஜித், கெளசிகன் ஆகியோரைப் பிடித்திருக்கிறோம். தலைமறைவாகியிருப்பவர்களைத் தேடி வருகிறோம். இதற்கிடையேதான், இவர்களுக்கு உடந்தையாக இருந்த சங்கரலிங்கம், தானும் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட திருப்பதியைப் பிடித்தால்தான் அனைத்தையும் உறுதி செய்ய முடியும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.