ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த பன்னைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ரகு என்பவர், தன்னுடைய மனைவி ஆசிரியர் படிப்பு படித்திருப்பதால் நீண்டகாலமாக வேலைக்காக முயற்சி செய்து வந்திருக்கிறார். ரகுவின் நண்பர் ஒருவர், `ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரயில்வே, வங்கி, மின் வாரியம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவார்’ எனக் கூறியிருக்கிறார்.
இதை நம்பிய ரகு, தன் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி பலமுறை சென்று கார்த்திகேயனிடம் கேட்டிருக்கிறார். கார்த்திகேயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க காவலர் ஒருவரிடம் வேலைக்காக 12 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார் ரகு. மேலும், தன் மனைவிக்கு விரைவாக அரசு வேலை வாங்கித் தருமாறும் கூறியுள்ளார். அதற்கு, “கண்டிப்பா செஞ்சிடலாம் பாஸ்” என கார்த்திகேயனும் உறுதி அளித்திருக்கிறார். இதை நம்பிய ரகு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தன்னுடைய உறவினர்களான கோபிநாத், கண்ணன், குழந்தைவேலு, கந்தசாமி, பழனி, அனிதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் 4 லட்சம் முதல் 36 லட்சம் வரை லஞ்சமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட கார்த்திகேயன், சொன்னது போல் யாருக்கும் அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்திருக்கிறார் ரகு. ஒரு கட்டத்தில் கார்த்திகேயனிடம் பணம் கொடுத்தவர்கள், ரகுவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரகு இது குறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மத்தியக் குற்றப்பிரிவு ஆய்வாளர் கீதா வழக்கு பதிவுசெய்து, தலைமறைவான கார்த்திகேயனைத் தேடி வந்தார்.
இந்த நிலையில் சென்னை, ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த கார்த்திகேயனை செல்போன் IMEI நம்பர் மூலமாக TRACE செய்து போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்தனர். விசாரணையில் கார்த்திகேயன் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1,11,40,000 ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கார்த்திகேயனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.