திருமலை: கவர்னர் உரையை கிண்டல் செய்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான கலந்துரையாடலின்போது ஆளுநர் உரையை எதிர்கட்சியினர் கேலி செய்வதாக நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் உரை குறித்து தவறான தகவல்களை தெலுங்கு தேசம் கட்சி பிர சாரம் செய்வதாக வீடியோ காணொலியை அமைச்சர் காண்பித்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் தெலுங்கு தேசம் கட்சியினரின் கவர்னர் அவமதிப்பு குறித்து சிறப்புரிமைக் குழுவின் முன் வீடியோ காண்பிக்கப்படும். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி 12 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். இதில் பையாவுல கேசவ், நிம்மலா ராமாநாயுடு, கோட்டம்ரெட்டி தர் ஆகியோரை இந்த அமர்வு முடியும் வரையும், மற்றவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தும் சபாநாயகர் உத்தரவிட்டார்.