'தசரா' படம் 'புஷ்பா' படம் போல உள்ளதா? – நானி பதில்
தெலுங்கில் பல வித்தியாசமான படங்களில் நடித்து வரும் நானி அடுத்து கதாநாயகனாக நடித்துள்ள 'தசரா' படம் இந்த மாதம் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி லக்னோவில் நேற்று நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் 'தசரா' படத்தைப் பார்ப்பதற்கு 'புஷ்பா' படம் போலவே உள்ளது, நானியின் கதாபாத்திரமும் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் போலவே உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நானி, “இல்லை, ஹேர்ஸ்டைல், பனியன், லுங்கி தவிர வேறு எதுவும் ஒரே மாதிரி இருக்காது. 'தசரா' படம் வெளிவந்த பிறகு இதை 'தசரா லுக்' என்றே சொல்வீர்கள்,” என்றார். தென்னிந்தியப் படங்கள் தற்போது பாலிவுட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறதே என்ற கேள்விக்கு, “எனது சிறு வயதில் ஐதராபாத்தில் நிறைய ஹிந்திப் படங்கள் வெளிவரும். இப்போது தெலுங்குப் படங்கள் வட இந்தியாவில் அதிகமாக வெளியாகிறது. அதனால், இரண்டிற்கும் சரியாகப் போய்விட்டது,” என்றார்.
நேற்று இரவு வெளியான 'தசரா' டிரைலர் தெலுங்கில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஹிந்தியில் 4 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளையும், தமிழில் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.