தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே யானையை வனத்துக்குள் இடம்பெயரச் செய்ய வனத்துறையினர் பயன்படுத்திய வெடியால் கரும்புத் தோட்டம் எரிந்து சேதமானதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் நடமாடி வருகின்றன. அவற்றை வனத்துறையினர் வெடி வெடித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்கின்றனர். ஆனாலும், சில நாட்களில் மீண்டும் யானைகள் விளைநிலங்களில் நுழைந்து சேதம் ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், புதன்கிழமை மாலை பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி பகுதியில் மாதையன், சிவராஜ் ஆகிய விவசாயிகளின் கரும்புத் தோட்டத்துக்குள் யானை ஒன்று நுழைந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று, பட்டாசுகளை வெடித்தும், வான வெடிகளை கொளுத்தி வீசியும் யானைகளை வனத்துக்குள் செல்லவைக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, வெடிகள் கரும்புத் தோட்டத்துக்குள் விழுந்ததில் காய்ந்த கரும்புத் தோகைகளில் தீப்பற்றியது. இந்த தீ வயல் முழுக்க பரவியதால் கரும்புத் தோட்டத்தின் பெரும்பகுதி எரிந்து சேதமானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இரவு அப்பகுதியில் திரண்டனர்.
விளைநிலங்களில் யானைகள் நுழைவதை நிரந்தரமாக தடுக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியும், தீ விபத்தில் சேதமான கரும்பு வயலுக்கான இழப்பீடு வழங்கக் கோரியும் பிக்கிலி-பாப்பாரப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு நகரப் பேருந்தையும் அவர்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வனம், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
‘நாளை(16-ம் தேதி) மாவட்ட வன அலுவலர் மற்றும் பாலக்கோடு டிஎஸ்பி ஆகியோர் நேரில் வந்து, கரும்பு வயல் தீ விபத்தில் சேதமான சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவர். அப்போது, விவசாயிகளும், கிராம மக்களும் தங்களது புகார்களை அவர்களிடம் தெரிவிக்கலாம். அதுவரை சாலை மறியலை கைவிடுங்கள்’ என்று வலியுறுத்தினர்.
இதையேற்ற கிராம மக்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களால் அப்பகுதியில் இன்று மாலை முதல் இரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.