மும்பையை சேர்ந்த கெளரி பிடே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், `உத்தவ் தாக்கரேயும் அவரின் குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கின்றனர். அது குறித்து போலீஸில் புகார் செய்த போது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். எனவே சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இது நீதிபதிகள் தீரஜ் மற்றும் வால்மீகி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
இதையடுத்து இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், `மும்பை மாநகராட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல்களுக்கும், மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ஒன்றும் இல்லாத புகாரை நீதிமன்றம் மூலம் விசாரணைக்கு உத்தரவிட மனுதாரர் முயற்சிக்கிறார். இந்த மனுவும், புகாரும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் இருக்கிறது. அதோடு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு மிகவும் குறைவான ஆதாரங்கள் மட்டுமே இதில் இருக்கிறது. மும்பை மாநகராட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழலுக்கும், தாக்கரே குடும்பத்தின் சொத்து திடீரென உயர்ந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. மனுவை படித்துப்பார்க்கும் போது மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளவர்களின் சொத்து திடீரென அதிகரித்ததாக அனுமானத்தின் அடிப்படையில் யூகிக்கிறார் என்று தோன்றுகிறது. எனவே மனுதாரர் நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராத தொகை நிதி வழக்கறிஞர்கள் நலநிதியில் சேர்க்கப்படவேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கஞர் காமத், `மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.