திருச்சியில் தி.மு.க எம்.பி சிவா, அமைச்சர் நேரு ஆதரவாளர்களிடையே இன்று காலை மோதல் வெடித்தது. இரு பிரிவினரிடையேயான இந்த மோதல் காவல் நிலையத்திலும் எதிரொலித்தது. திருச்சி சிவாவின் கார், வீட்டின்மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், காவல் நிலையத்திலும் தாக்குதல் நடத்தினர்.
காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் ஆளும் தி.மு.க-வைச் சாடிவருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க மேலிடம் இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.
இந்த மோதல் தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55-வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்” என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55-வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகிய நால்வர்மீதும் வழக்கு பதிவுசெய்த கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார், அவர்களை சற்று முன்பு கைதுசெய்தனர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரும் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தப்படவிருக்கின்றனர்.