திருப்போரூர் மறைமலைநகர் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார் மற்றும் திருப்போரூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் இணைந்து திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை சுற்றி உள்ள பூ, மாலை, பொரி விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பூ, மாலை போன்றவற்றை பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், தாமரை இலை, மந்தாரை இலை போன்றவற்றை பயன்படுத்தி பூக்கள், மாலைகளை வழங்கலாம் அல்லது குறைந்த விலையில் தயார் செய்யப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்தி விற்பனை செய்யலாம் என்று அனைத்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், அரசின் தடை அமலில் உள்ளதால், இந்த பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால், ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு மற்றும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை விளக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை கடைகளில் ஒட்டினர்.