தொடர் அமளி 3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நாடாளுமன்றம் இன்று கூடியதும் அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் அவை நடவடிக்கை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இந்நிலையில், 2 மணிக்கு அவை தொடங்கியதும், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் 3-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.

லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் அதானி விவகாரத்தில் விவாதம் தேவை என எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.அதானி குழும முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் லண்டனில் ராகுல்காந்தி பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினரும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.