நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணனின் செயல்பாடுகளால் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது பற்றி கட்சியினர் சிலர் நம்மிடம் பேசுகையில், “கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த சரவணனை, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மேயராகக் கொண்டுவந்தார். தனது ஆதரவாளரான சரவணன் தனக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார் என்ற எண்ணத்திலேயே அவருக்கு மேயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால், பொறுப்பு கைக்கு வந்ததும் மேயர் சரவணனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கத் தொடங்கியதுடன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாபுக்கு எதிராகக் காய்நகர்த்தத் தொடங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டு கட்சியினரை ஒதுக்கத் தொடங்கினார். குறிப்பாக மத்திய மாவட்டச் செயலாளருக்கு எதிராகவே கட்சித் தலைமையிடம் புகார் அளித்தார். அதுவே இருவருக்கும் இடையே மோதல் உருவாகக் காரணமாகி விட்டது” என்கிறார்கள் தி.மு.க-வின் உள்ளூர் பிரமுகர்கள்.
தி.மு.க கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, ”கவுன்சிலர்கள் யாரையும் கண்டுகொள்வதில்லை. நாங்கள் தி.மு.க-வினர் என்பதைக் கூட பொருட்படுத்தாமல் செயல்பட்டார். நாங்கள் ஏதாவது கோரிக்கையுடன் சென்றால் கூட செய்து கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியினர், கூட்டணிக் கட்சியினரின் வார்டுகளில் நடக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களைக் கூட எங்கள் வார்டுகளில் செய்து கொடுப்பதில்லை.

அவராகவே தனி கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு செயல்படத் தொடங்கினார். அதனால் தான் மாநகராட்சிக் கூட்டங்களில் நாங்கள் அவருக்கு எதிராகப் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தி.மு.க கவுன்சிலர் ஒருவரே, மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகள் லஞ்சப் புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது” என்று வருத்தப்பட்டார்கள்.
நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக ஏற்கெனவே நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தி.மு.க கவுன்சிலர்கள் 40 பேர் கடந்த மாதத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷணமூர்த்தி ஆகியோரிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசியதுடன், தி.மு.க கவுன்சிலர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆனாலும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த தி.மு.க கவுன்சிலர்கள் 35 பேர் நேற்று இரவு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அமைச்சர் கே.என்.நேரு திருச்சிக்கு வந்துவிட்டதால் கவுன்சிலர்கள் அனைவரும் திருச்சிக்குச் சென்று அமைச்சர் நேருவைச் சந்தித்து மேயர் சரவணனை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடு இருக்கிறது. அதைப் பேச்சுவார்த்தை மூலமாப் பேசித் தீர்ப்போம். காரணம் மேயரும் எங்கள் கட்சிக்காரர் தான். இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேயர் ஆதரவாளர்கள் நம்மிடம் பேசுகையில், “மேயர் சரவணன் மீது திட்டமிட்டே சிலர் புகார் தெரிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் கட்சியினர் சிலரே இருக்கிறார்கள். அனைத்து விவரங்களும் கட்சித் தலைமைக்குத் தெரியும்” என்கிறார்கள்.
நெல்லை மாநகராட்சியில் சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில், குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. ஆண்டுமுழுவதும் தண்ணீர் ஓடக்கூடிய தாமிரபரணி நதியின் கரையில் வசித்தபோதிலும், குடிநீர்த் தேவையைக் கூட இதுவரை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 20 ஆண்டுகளாகியும் முழுமை பெறாமல் இருப்பதால் தாமிரபரணி நதியில் சாக்கடை கலப்பதைத் தடுக்கமுடியவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகள் பலவும் நிறைவேற்றப்படாத நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், கவுன்சிலர்கள் இடையே மோதல் நீடிப்பது பொதுமக்களை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது.