இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா வைரஸின் துணை வைரஸான H3N2 வகையால் ஏராளமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இந்த வைரஸுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பெரும்பான்மையாக சிறுவர், சிறுமியர்களையே தாக்குகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவர்களால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதால், புதுச்சேரியில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, நாளை முதல் 26.03.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.