புதுடெல்லி: பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,816 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உயர்மட்ட குழு: வெள்ளம், நிலச்சரிவு, நிலவெடிப்பு போன்றவற்றால் கடந்த ஆண்டில் அசாம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேகாலயாமற்றும் நாகாலாந்து மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த மாநிலங்களுக்கு உதவிடும் விதமாக கூடுதல் நிதியுதவியினை வழங்க அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு ரூ.520 கோடியை தேசிய பேரிடர் நிவாரணநிதியிலிருந்து வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.239 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.941 கோடியும், மேகாலயத்துக்கு ரூ.47 கோடியும்,நாகாலாந்துக்கு ரூ.68 கோடியும் கூடுதல் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1,816 கோடிக்கு இந்த பேரிடர் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 மாநிலங்களுக்கு..: மத்திய அரசு 2022-23 நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,570 கோடியை 25 மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.502 கோடியை 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.