சென்னை: வணிக பயன்பாட்டுக்கான மின்வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறந்த கடன் திட்டங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து கிளைமேட் டிரெண்ட்ஸ், க்ளீன் மொபிலிட்டி ஷிப்ட் ஆகிய அமைப்புகள் சார்பில்சென்னை, மதுரை, கோவையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வின்படி, குறைவான சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட வசதி குறைபாடு காரணமாகவே வணிக வாகன பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் மின்வாகனங்கள் வாங்க தயங்குகின்றனர். அதேபோல, சொந்த வாகனம் வைத்திருப்போரில் 44 சதவீதம் பேர்மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்கவும், 4 சதவீதம் பேர் மட்டுமே மின்சார கார்கள் வாங்கவும் விரும்புகின்றனர் என்று தெரியவந் துள்ளது.
இந்த நிகழ்வில் தமிழக தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசின் மின்வாகன கொள்கை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மின்வாகனங்கள் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணிக பயன்பாட்டுக்கான மின்வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறந்த கடன் திட்டங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும்.
மின்சார பேருந்து வாங்க அரசுஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றினால் கூடுதல் செலவு ஏற்படும்.எனவே, வாகனங்கள் படிப்படியாக மின்சார வாகனமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். கிளைமேட் டிரெண்ட்ஸ் இயக்குநர் ஆர்த்தி கோஸ்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.