சென்னை: இந்தியா முழுவதும் நடைபெற்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஓபிசி,எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்-ஆஃப் 800-க்கு 257 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ள தேசிய தேர்வு வாரியத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்தியஅரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் 4 ஆயிரம் இடங்கள் உட்பட 42,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
இந்நிலையில், 2023-24-ம் கல்விஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 5-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆன்லைனில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 2.09 லட்சம் பேர் தேர்வில் பங்கேற் றனர். பதிவு செய்தவர்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை https://www.natboard.edu.in/, https://nbe.edu.in/ ஆகியஇணையதளங்களில் தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று வெளியிட்டது.
முதல் மதிப்பெண் 725: 800 மதிபெண்களுக்கு நடைபெற்ற நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு(இடபிள்யூஎஸ்) 291 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் மருத்துவர் ஒருவர் 800-க்கு 725 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் பாராட்டு: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை மார்ச் 31-ம் தேதி வெளியிடுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்திருந்த நிலையில், 17 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில், “முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வாழ்த்துகள். முதுநிலை நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்தி மிகக்குறுகிய காலத்தில்தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மிகச்சிறப்பாக பணியாற்றி இருக்கும் தேசிய தேர்வு வாரியத்துக்கு பாராட்டுக்கள்” என்று தெரிவித் துள்ளார்.