ரயில் நிலையத்தில் உள்ள டிரம்மில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சர்.எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (எஸ்விஎம்டி) ரயில் நிலையத்தில் தானியங்கி கதவுக்கு அருகில் நேற்று இரவு துர்நாற்றம் வீசியுள்ளது. இதைக்கண்ட ஆர்பிஎஃப் பணியாளர்கள், பையப்பனஹள்ளி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து டிரம்மைப் பார்த்த போது இளம்பெண்ணின் சடலம் இருந்தது.

காவல்துறை நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத 3 பேர் அந்த பிளாஸ்டிக் டிரம்மை ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வந்து ரயில் நிலைய நுழைவாயில் அருகே போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அப்பெண்ணுக்கு 31 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து ரயிலில் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சௌம்லதா கூறுகையில், “மச்சிலிப்பட்டினத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் இறந்தவர் யாரென இன்னும் அடையாளம் காண முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் ஜனவரி 4-ம் தேதி பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் உடல் சிதைந்த நிலையிலிருந்ததை பார்த்துள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், எஸ்எம்விடி ரயில் நிலையத்தில், பயணிகள் ரயிலின் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.