வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பி பதற்றத்தை ஏற்படுத்திய வழக்கில் டெல்லியை சேர்ந்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த்குமார் உம்ராவ் தரப்பில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்த நிலையில், போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது.

வதந்தியால் பதற்றமான பிற மாநிலத்தவர்கள்.

தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்தி பேசியதால் 12 பேர் தூக்கிலிடப்பட்டனர் , பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்ட நிலையில் அந்த மாநில துணை முதல்வர் தேஜஸ்வி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் என்று படங்களுடன் சமூக வலைதளத்தில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் பிரசாந்த்குமார் உம்ராவ் பதிவிட்டிருந்தார். இந்த தகவலை பல லட்சம் பேர் பார்த்து பதற்றமடைந்தனர்.

இது குறித்து புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் வழக்கு பதிவுசெய்தது, அவரை கைதுசெய்ய தனிப்படை அமைத்தது. இந்த நிலையில், தான் கைதுசெய்யப்பாடாமலிருக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார்.  மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றுகிறேன். பா.ஜ.க-வின் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறேன். என் மீது அரசியல் பழிவாங்கும் வகையில், இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ட்விட்டரில் வந்த தகவலைத்தான் நான் பார்வர்ட் செய்தேன். யார் இதை தயார் செய்தாரோ அவர்தான் குற்றவாளி. இந்த தகவலால் இரு மாநில மக்களுக்கு இடையே எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதனால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வட மாநில தொழிலாளிகள்

ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர், “இந்த தகவலை மனுதாரர்தான் உருவாக்கி தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். இதை 5 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இது போல் பல பதிவுகளை இவர் பதிவிட்டிருக்கிறார். அவருக்கு முன்ஜாமீன் அனுமதிக்க கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், “தமிழகத்தில் வட மாநிலத்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதுபோல் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச்செல்ல முயற்சித்தனர். இந்த தகவல் பரப்பியதன் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டியிருக்கிறது” என்றவர், தூத்துக்குடி போலீஸ் மே 17-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

மதுரை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கில் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரசாந்த்குமார் உம்ரா தப்ப முடியாது என்றும், அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பதற்றத்தை ஏற்படுத்தும் பல தகவல்கள் குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.