வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிரசாந்த் கிஷோருக்கு சீமான் பதில்

சென்னை: “நிதிஷ் குமாரை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவும், உங்களால் முடியவில்லை, நான் பாருங்கள்… சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளேன் என காட்டுவதற்காகவும் பிரசாந்த் கிஷோர் என்னைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி (DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் சென்னையில் புதன்கிழமை நடந்த கோட்டையை நோக்கி மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சீமான் பேசிய வீடியோவை வெளியிட்டு, இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், “முதலில் பிரசாந்த் கிஷோருக்கு என்னுடைய மாநிலத்தைப் பற்றி தெரியனும். காவிரியில் எங்களுக்கு தண்ணீர் கேட்டபோது அடித்து விரட்டப்பட்டு, இந்திய நிலப்பரப்பிற்குள்ளே அகதிகளாக்கப்பட்டபோது, இவர் எங்கிருந்தார் என்று சொல்ல வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் அடித்து விரட்டப்படும்போது, ஆந்திர காட்டிற்குள் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றபோது, அந்த செயலைக் கண்டிக்காமல் இவர் எங்கிருந்தார் என்று தெரியாது. நேற்றுவரை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கெல்லாம் ஒன்றுமே சொல்லவில்லையே.

தமிழர்கள் எங்கே அடி வாங்கினாலும் நன்முறையாக இருக்கிறதே எப்படி, வட இந்தியர்கள்தான் குறிப்பாக தமிழக இளைஞர்களை, தமிழர்களை அடிக்கிறார்கள். கோவை, கரூர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்? திருப்பூரில் ஒரு தொழிற்சாலையில் கட்டைகளைத் தூக்கிக் கொண்டு அடித்தது யார்? சும்மா எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, அவர் மாநிலத்தில் கட்சி தொடங்கி அரசியல் நடத்துவதற்காக பிரசாந்த் கிஷோர் பேசி வருகிறார். அவருக்கு நிதிஷ் குமாரை எதிர்க்க வேண்டும். நிதிஷ்குமாரிடம் உங்களால் முடியவில்லை, நான் பாருங்கள் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளேன் என காட்டுவதற்காக, அவர் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

தம்பி பிரசாந்த் கிஷோர், நீங்கள் பிஹாரி. பிஹாரிகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நான் தமிழன், தமிழர்களுக்கு உண்மையாகத்தான் இருப்பேன். நான் என் மண்ணை, என் மக்களைப் பற்றித்தான் நான் சிந்திக்க முடியும். எனவே அதுகுறித்தெல்லாம் நான் கவலைப்படுவது இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை.

நம்முடைய கோரிக்கை வடகிழக்கு மாநிலங்களைப் போல, தமிழகத்திற்குள் நுழையும் வடஇந்தியர்களுக்கு உள்நுழைவு அனுமதி கொடுக்க வேண்டும். அவர்கள் எந்த மாநிலம், என்ன வேலைக்காக வந்திருக்கிறார். அவரை அழைத்துவந்த முகவர் யார், எங்கு தங்குவார், எவ்வளவு நாட்கள் தங்குவார் என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணா சென்று ஒருவரை காவல்துறை பிடித்தது. மற்ற 3 பேரை உரிய தரவுகள் இல்லாததால் கைது செய்ய முடியவில்லை. வடஇந்தியர்கள் வந்தபிறகு குற்றச் செயல்கள் கூடியிருக்கிறதா? இல்லையா? அதிகமாக கஞ்சா, அபீன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கூடியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.