விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து மதமாற்றம்: வெளிநாடுகளில் இருந்து பணபரிமாற்றம்; 5 மாநிலங்களுக்கு தொடர்பு; தேசிய குழந்தைகள் ஆணைய குழு விசாரணையில் அதிர்ச்சி தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் போதை மருந்துகளை கொடுத்து, மதமாற்றம் நடைபெற்று வந்ததாகவும், இதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் குவிந்ததாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணைய குழு தெரிவித்துள்ளது. விழுப்புரம் குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தல், பாலியல் கொடுமை, சிலர் மாயம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின் உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களை காவலில் எடுத்து விசாரித்ததன் அடிப்படையில் கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் செயல்பட்டு வரும் காப்பகங்களிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தலைமையில் டெல்லியிலிருந்து 3 பேர் கொண்ட குழு, குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் நேற்று ஆய்வு செய்தனர். ஆட்சியர் பழனி மற்றும் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர். அப்போது, போதை மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறை, ஜெபம் நடத்தப்பட்ட அறைகளை பூட்டி சீல் வைக்க குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து அதிகாரிகள் 2 அறைகளையும் பூட்டி சீல் வைத்தனர். அன்புஜோதி ஆசிரமம் வழக்கு தொடர்பாக மாற்றுத்திறனாளி, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன், வருவாய்த்துறை, மற்றும் காவல்துறை, சிபிசிஐடி போலீசாருடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதன்பிறகு தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியதாவது: ஆசிரமத்திலிருந்து 35,000 போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துகள் எந்த மருத்துவமனையிலிருந்து வந்தது அல்லது வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வந்ததா? என்று சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இரவு நேரங்களில் ஜெபம் செய்து மதமாற்றம் நடந்துள்ளது. இங்கு சேர்க்கப்பட்டிருந்த குழந்தையின் தாய் இதுகுறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். டார்க் ரூமிற்கு அழைத்துச்சென்று உடல்நிலை சரியில்லாதவர்களை சரியாகிவிடும் என்று கூறி மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல்போன 15 பேரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், 2 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடிவருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். சிறியவர்கள், பெரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. போதை மருந்துகளை கொடுத்து அடிமையாக்கி வைத்திருந்தனர். இதற்காக பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். தனிநபராக இதையெல்லாம் செய்யமுடியாது. இவருக்கு பின்னால் ஒரு இயக்கமே இருந்திருக்கலாம்.

இந்த ஆசிரமத்துடன்  புதுச்சேரி மாநிலத்தை தவிர்த்து ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட 5 மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளது. 60 பேரை மட்டுமே பராமரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் 140க்கும் மேற்பட்டோரை இந்த கட்டிடத்தில் அடைத்து வைத்துள்ளனர். சாலையில் செல்வோர், படுத்து தூங்குவோரை எல்லாம் பிடித்து வந்து அடித்து கை, கால்களை உடைத்து மாற்றுத்திறனாளிகளாக மாற்றியுள்ளனர். பேய் வீடு போல மோசமான விஷயங்கள் இங்கு நடந்துள்ளது. தப்பித்து ஓடுபவர்களை குரங்குகளை கடிக்க வைத்து மிரட்டியுள்ளனர். எங்களது விசாரணை அறிக்கையை 2 நாட்களில் மத்திய அமைச்சகத்திடம் ஒப்படைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* அதிகாரிகள் மீது நடவடிக்கை
அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* 15 பேர் தொடர்பாக விசாரணை
ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போன திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை மீட்டு தர வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கானின் நண்பர் ஹலிதீன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட சபீருல்லா, அங்கு மரணமடைந்து இருக்கலாம். அவரது அங்க அடையாளங்களுடன் ஒத்துப்போகும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, உடலை அடையாளம் காட்ட அமெரிக்காவில் உள்ள உறவினரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து தகவல் பெற்று தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சபீருல்லாவின் மனைவி மற்றும் மகள்  சத்தியமங்கலத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் இருப்பிடம் விரைவில் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம் தேவை. அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து 15 பேர் காணாமல் போனது தொடர்பான விசாரணை  நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.