வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹாங்காங்: மூன்று ஆண்டுகளாக சுற்றுலா பயணியருக்கு மூடப்பட்டு இருந்த சீன எல்லைகள் இன்று (மார்ச் 15) முதல் திறக்கப்படுகின்றன.
கல்வி, வேலை, சுற்றுலா உட்பட அனைத்து வகையான, ‘விசா’க்களும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல வினியோகிக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று பரவல் துவங்கியதும், 2020 மார்ச் முதல் சீனா தன் எல்லைகளை மூடியது. சுற்றுலா பயணியர் சீனாவுக்குள் நுழைய முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. அனைத்து வகையான, ‘விசா’ வினியோகமும் நிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் படிப்படியாக குறைய துவங்கியதும் மற்ற நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தின. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சுற்றுலா பயணியர் வருகையை திறந்துவிட்டன. ஆனால், சீனாவில் மட்டும் தடை தொடர்ந்தது.
இதன் காரணமாக, சீனாவில் படித்து வந்த பிற நாட்டு மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் தவித்து வந்தனர். சமீபத்தில் கூட சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, கட்டுப்பாடுகள் மேலும் தீவிரம் அடைந்தது. இதற்கு எதிராக மக்கள் போர்க் கொடி துாக்கிய பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், தொற்றுப் பரவலும், உயிரிழப்புகளும் வேகம் எடுத்தன. ஒரு வழியாக சீனாவில் கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக மூடிக்கிடந்த எல்லைகளை, சீனா தற்போது திறந்துள்ளது.
கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து விதமான விசாக்களையும் இன்று முதல் வினியோகிக்க உள்ளது. இதனால், சீனாவில் படிக்கும் இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு மாணவர்களின் நீண்ட நாள் கவலை முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது: கடந்த 2020, மார்ச் 28க்கு முன் சீன விசா பெற்றவர்கள், விசா காலம் முடிவுக்கு வராத பட்சத்தில் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டினர் ஹாங்காங், மக்காவ் வழியாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திற்குள் விசா இன்றி நுழையும் நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement