Doctor Vikatan: கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோயைத் தவிர்க்க முடியுமா? கல்லீரலை டீடாக்ஸ் செய்வது சாத்தியமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் காவ்யா டெண்டுகுரி
கல்லீரலை பாதிக்கும் தொற்றுகளில் ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி, ஈ ஆகிய அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு வைரஸ் தொற்றும் ஒவ்வொருவித பாதிப்பை ஏற்படுத்தும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வகை தொற்றுகளையே நாம் அதிகம் பார்க்கிறோம்.
இவை மாசற்ற உணவு மற்றும் தண்ணீர் மூலம் வருபவை. சுகாதாரமற்ற சூழலில் வெளியிடங்களில் சாப்பிடும்போது அந்த உணவு மற்றும் தண்ணீரில் இந்த வைரஸ் இருந்தால் அதன் மூலம் பாதிக்கும். இவை பாதித்தால் மஞ்சள் காமாலை வரும்.
மேற்குறிப்பிட்ட அத்தனை ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றுகளிலும் முதல் அறிகுறி மஞ்சள் காமாலையாகவே வெளிப்படும். எல்லோருக்கும் அப்படி வரும் என்று அவசியமில்லை. அறிகுறி தெரிபவர்களுக்கு கல்லீரல் செல்கள் பழுதடைவதை வைத்து அதை மஞ்சள்காமாலை எனக் கண்டுபிடிப்போம். இதை நிச்சயம் தவிர்க்க முடியும்.
வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சுகாதாரமற்ற தண்ணீரை அருந்தக்கூடாது. ரத்ததானம் செய்யும்போதும், டாட்டூ குத்திக்கொள்ளும்போதும், நரம்புகளில் ஊசி போட்டுக்கொள்ளும்போதும் பயன்படுத்தும் ஊசிகள் புதியனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் உறவின்போது பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சூடான, ஃப்ரெஷ்ஷான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மஞ்சள் காமாலை பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அப்படி வரும்போது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். மரபியல் காரணமாக வந்தால் அதற்கான சிகிச்சை வேறு. வைரஸ் தொற்று, மதுப்பழக்கம் போன்ற காரணங்களால் வந்தால், அந்தக் காரணத்துக்கேற்ப சிகிச்சையும் வேறுபடும்.
கல்லீரலை டீடாக்ஸ் செய்வது குறித்து இன்று இணையதளங்களில் ஏராளமான தகவல்கள், பரிந்துரைகள், வீடியோக்கள் பரவி வருகின்றன. ஆனால் ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு தண்ணீர் எடுப்பதே கல்லீரல் ஆரோக்கியத்துக்கும் அதைச் சுத்தப்படுத்தவும் போதுமானவை. நம் மூதாதையர் காலத்தில் பின்பற்றியதுபோல வாரம் ஒருநாள் விரதம் இருப்பது கல்லீரலுக்கு நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.