மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ளன. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று காலை வருகை புரிந்தார்.
புதிய உறுப்பினர் அடையாள அட்டை
மூவரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
கையெழுத்திட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை தொண்டர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இத்தகைய சம்பவத்தை பாஜகவே விரும்புகிறதோ என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இரவில் தான் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகியை மாவட்ட தலைவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்தார். ஆனால் அடுத்த ஒருநாளில் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார்.
டிடிவி தினகரன் மீது விமர்சனம்
இதற்கு பாஜக மாவட்ட தலைவரை வலியுறுத்தி எந்தவித பயனும் இல்லை எனத் தெரிந்துவிட்டது. இனி சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம். எடப்பாடி பழனிசாமி உருவப் படம் எரித்த பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளோம். டிடிவி தினகரன் எங்களை வட்டார கட்சி என்று சொல்கிறார்.
பொதுச் செயலாளர் தேர்தல்
அப்படியெனில் அவர் கட்சி வார்டு கட்சியா? என விமர்சித்தார். புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோருக்கு பின்னர் எடப்பாடியை தான் பார்க்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யபட்டவர் எடப்பாடி பழனிசாமி. அடுத்தகட்டமாக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டிருக்கிறோம். இதையொட்டியே எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி வருகிறோம்.
பாஜக – அதிமுக கூட்டணி
தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை தற்போதைய ஆட்சி நிறைவேற்ற வில்லை என்று சுட்டிக் காட்டினார். மேலும் பேசுகையில், பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் இல்லை. இந்த கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பாஜகவினர் கண்டிக்க வேண்டும்.
ஒரே இரவில் செய்ததை எல்லாம் மாற்றி தங்களின் செயல்பாடுகளை பாஜகவினர் விமர்சனத்திற்கு ஆளாக்கி இருக்கின்றனர். புரட்சி தலைவி அம்மா குறித்து அண்ணாமலை பேசியிருப்பது பக்குவப்படாத கருத்து என்று கடம்பூர் ராஜூ கூறினார்.