விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன தாய், மகன் ராஜஸ்தான் மாநில ஆசிரமத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஜூபின்பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி என்ற பெயரில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் 15 பேர் காணாமல் போயிருப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 8 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஆசிரமத்திலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா (70) என்பவர் பெங்களூரு ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்., அங்கிருந்த தப்பிச்சென்றார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், பத்ராவதியில் உள்ள மசூதியின் முன் இறந்து கிடந்த முதியவர் ஜாபருல்லாவாக இருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநில காப்பகங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (85), அவரது மகன் முத்து விநாயகம் (48) ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காப்பகத்தில் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மற்றவர்கள் குறித்தும் தொடர்ந்து தேடிவருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.