நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் இருந்து வெளியேறும் எரிபொருள் ஆவியால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை தடுப்பதற்காக, அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ என்ற தொழில்நுட்பம் அமைக்க வேண்டும் என்று மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2020ல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. பல மாநிலங்களில் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ கொண்டு வரப்படாமல் இருந்தது.
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ அமைக்க வேண்டும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ‘வேப்பர் ரெக்கவரி’ தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கால வரம்புக்குள் நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த தென்மண்டல பசுமை தீரப்பாயம், ‘தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ முறையை ஏற்படுத்த வேண்டும். புதிய பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கும் முன், ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ முறையை கட்டாயமாக்க வேண்டும். இம்முறையை பின்பற்றாத பெட்ரோல் நிலையங்கள் மீது மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜே.பி.பர்திவாலா அடங்கிய அமர்வு, ‘சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் வகையில் பெட்ரோல் நிலையங்களில் ‘வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்’ தொழில்நுட்பத்தை புதிதாக கால வரம்பை நிர்ணயம் செய்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கால வரம்புக்குள் அமல்படுத்தாத பெட்ரோல் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தொழில்நுட்பம் பெட்ரோல் நிலையங்களில் முறையாக ஏற்படுத்தப்பட்டதா, சரியாக பராமரிக்கப்படுகிறதா, விதி மீறல்கள் நடக்கிறதா என்பதனை அந்தந்த மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்’ எனக்கூறி எண்ணெய் நிறுவனங்களின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.