பாட்னா: பீகாரில் பாஜ எம்எல்ஏ லக்கேந்திர ரோஷன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் பேரவையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் சட்டப்பேரவையில், தலித் எம்எல்ஏவை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது பாஜ எம்எல்ஏ லக்கேந்திர ரோஷன் மைக்கை பிடுங்கி கீழே போட்டார். இதனால், அவர் 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று பீகார் சட்டப்பேரவை கூடும்முன், பேரவை வளாகத்தில் பாஜவினர் கூடி ரோஷன் சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை கூடியதும், ரோஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பீகார் சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் சின்ஹா, இருதரப்பினரும் தவறு செய்துள்ளபோது ரோஷன் மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏ அக்தருல் இமான் ஷாஹி, குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை பாஜ நடத்தும் விதம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையில் இருந்து வௌியேறிய பாஜ எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் முறையிட போவதாக தெரிவித்தனர்.