புதுடில்லி, ‘நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுப்பது ஓர் அரசை கவிழ்த்துவிடும் என்பதை அறிந்து, மிக எச்சரிக்கை உணர்வுடன் கவர்னர் தன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவேசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்.,குடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
இந்நிலையில், உத்தவ் மீது அதிருப்தி அடைந்த சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் 34 பேர், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவுக்கு எதிராக போர்கொடி துாக்கினர்.
இதையடுத்து மஹாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரே தன் பெரும்பான்மையை நிரூபிக்க அப்போது கவர்னராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.
இதில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மை இழந்த நிலையில், பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
கட்சியை கைப்பற்ற நடந்த போட்டியில், சிவசேனாவின் வில் – அம்பு சின்னம் மற்றும் கட்சியின் பெயரை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு அளித்து தேர்தல் ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த விவகாரத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? கட்சிக்குள் அதிருப்தி நிலவியதால் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது என்பதை நியாயப்படுத்த முடியாது.
‘அரசையே கலைக்க கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவர்னர் தன் அதிகாரத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்