கேரள மாநில சட்டசபை கூட்டம் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. அதில் கொச்சி பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ எரிந்த விவகாரம் மற்றும் திருவனந்தபுரத்தில் 16 வயது சிறுமி தாக்கப்பட்ட விவகாரங்களை கைகையில் எடுத்து கடந்த இரண்டு நாள்களாக எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய சட்டசபை கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அவசர தீர்மானம் கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ உமா தாமஸ் கோரிக்கை வைத்தார். அது பழைய விஷயம் எனக்கூறி விவாதத்துக்கு சபாநாயகர் ஏ.எம்.ஷம்சீஸ் அனுமதி மறுத்தார்.
இதையடுத்து சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேனரை தாங்கிப்பிடித்தபடி சட்டசபை கட்டடத்தில் அமைந்துள்ள சபாநாயகர் ஏ.எம்.ஷம்சீரின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரை தடுத்து முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக சபை காவலர்கள் கருதி உள்ளனர். இதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு எம்.எல்.ஏ-க்கள் முரண்டுபிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபை காவலர்கள் எம்.எல்.ஏ-க்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பெண் எம்.எல் ஏ கே.கே.ரமாவின் கை உடைந்துள்ளது. எம்.எல்.ஏ ஜெனீஸ்குமார் ஜோசப்-பை காவலாளிகள் மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த எம்.எல்.ஏ ஜெனீஸ் குமார் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ கே.கே.ரமா மருத்துவமனைக்குச் சென்று கையில் கட்டுப்போட்டுள்ளார். எம்.எல்.ஏ-க்கள் தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி சபை காவலர்கள் ஐந்துபேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ ஜெனீஸ் குமார் கூறுகையில், “மக்கள் பிரதிநிதி என்ற மரியாதை கூட இல்லாமல் தரையில் விழுந்த பிறகும் ஷூ காலால் காவலாளிகள் மிதித்தனர். சபாநாயகர் என்பவர் சி.பி.எம் கட்சி செயலாளர் அல்ல. எதிர்கட்சிகளின் உரிமைகளையும் அவர் தரவேண்டும்” என்றார். பெண் எம்.எல்.ஏ கே.கே.ரமா கூறுகையில், “நான்கைந்து பெண் காவலர்கள் கை, கால்களை பிடித்து வெளியே இழுத்தனர். மேலும் அவர்கள் எங்களை கீழேபோட்டு மிதித்தனர்” என்றார்.
இந்த விவகாரம் சட்டசபை கட்டடத்தின் உள் பகுதியில் நடந்ததால், உரிய அனுமதி இல்லாமல் அதுகுறித்து போலீஸ் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஏம்.எம்.ஷம்சீரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.