சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 எஸ்கலேட்டர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட வழித்தடத்தில் கடந்த ஜனவரி மாதம் 66 லட்சம் பயணங்களும், பிப்ரவரி மாதம் 63 லட்சம் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில்களில் 6.09 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், முதல் கட்ட வழித்தடத்தில் பயணிகளின் வசதிகளுக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக எஸ்கலேட்டர்களை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் முடிவு செய்துள்ளது.
இதன்படி, மீனம்பாக்கத்தில் 4, நங்கநல்லூர் சாலையில் 2, கிண்டியில் 2, சின்னமலையில் 1, நந்தனத்தில் 2, தேனாம்பேட்டையில் 1, டிஎம்எஸ் 2, ஆயிரம் விளக்கில் 1, அரசினர் தோட்டத்தில் 1, உயர்நீதிமன்றத்தில் 1, மன்னடியில் 1, வண்ணாரப்பேட்டையில் 1, தியாகராய கல்லூரியில் 2, தண்டையார் பேட்டையில் 1 என்று மொத்தம் 22 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் எழும்பூரில் 2, நேரு பூங்காவில் 1, அண்ணா நகர் கிழக்கில் 1, அண்ணா நகர் டவர் பூங்காவில் 3, திருமங்கலத்தில் 5, வட பழனியில் 4, ஈக்காட்டுத்தாங்கலில் 2, செயின்ட் தாமல் மவுன்ட்டில் 1 என்று மொத்தம் 19 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளது. இதன்படி முதல் கட்ட வழித்தடத்தில் கூடுதலாக 41 எஸ்கலேட்டர்கள் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.