சேகர் பாபு பாணியில் பி.மூர்த்தி: மதுரையில் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சி அரங்கை மதுரையில் அமைப்பது தொடர்பாக திமுக மாவட்டச்செயலாளர்கள் தலைமையில் மதுரை திருப்பாலை திடலில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அமைப்பது, ஏராளமான பார்வையாளர்களை அழைத்து வருவது, சிறப்பு விருந்தினரை அழைத்து கண்காட்சியை துவங்கி வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், வரும் 19ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி துவங்க உள்ளதாகவும், முதல்வர் சொல்கின்ற சிறப்பு விருந்தினர் மூலம் புகைப்பட கண்காட்சி துவக்கி வைக்கப்பட இருப்பதாகவும், இந்த புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். புகைப்பட கண்காட்சிக்கு முதல்வரை அழைக்க நேரில் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு தரப்பினரும் கண்காட்சியை பார்த்துச் சென்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் பார்த்து வியந்து பாராட்டினர். இந்த கண்காட்சி தமிழ்நாட்டில் பிற நகரங்களிலும் நடைபெற்றால் முதல்வர் ஸ்டாலினின் வரலாறு, அவர் முன்னெடுத்த பணிகள், படிப்படியாக முன்னேறிய விதம் என பல்வேறு விஷயங்கள் தெரியவரும் என கூறப்பட்டது.

அந்த வகையில் அமைச்சர் மூர்த்தி மதுரையில் புகைப்பட கண்காட்சியை அமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டார். இதேபோல் பிற அமைச்சர்களும் தங்கள் பகுதிகளில் புகைப்பட கண்காட்சியை அமைக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.