சேலம், கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 2020-22 ஆம் ஆண்டு வரலாற்று துறையில் முதுகலை படிப்பில் 8 மாணவிகள் 1 மாணவர் என 9 பேர் படித்தனர். படிப்பு முடிந்த நிலையில், இவர்கள் கடந்த ஐந்து மாதங்களாக பல்கலைக்கழகத்தில் மாற்றுச்சான்றிதழ் கேட்டு வந்துள்ளனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமோ மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்த தகவல்கள் வெளிவரவே நாம் சம்பந்தப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது அவர்கள் நம்மிடம், “எங்க துறையில் படிக்கிற 9 பேருமே பொருளாதார ரீதியாக பிந்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். படிப்பு செலவுக்கு கூட பெற்றோர்களை நம்பி தான் நாங்க இருந்து வருகிறோம். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே எங்கள் படிப்பை படித்து முடித்துவிட்டோம். இதில் ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் மாற்றுச்சான்றிதழ் கொடுத்துவிட்டு, எங்கள் 4 பேருக்கு மட்டும் கல்லூரி தரப்பில் தரக்கூடிய மாற்றுச்சான்றிதழை தராமல் கடந்த 5 மாத காலமாக அலைக்கழித்து வருகின்றனர். கேட்டால், எங்க துறை பேராசிரியருக்கு ஆதரவாக கலெக்டரிடம் மனு கொடுத்தது தான் காரணம் என்கிறார்கள்.
இதுதொடர்பாக நாங்கள் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து எங்கள் வரலாற்றுத்துறை தலைவர் கிருக்ஷ்ணகுமாரிடம் கேட்டதற்கு அவர், `கலெக்டர்ட்ட போய் மனு கொடுக்க தெரியுதுல… அப்போ இதையும் அங்க போய் வாங்கிக்குங்க’னு சொல்றாரு. அதுமட்டுமல்லாம எங்களோட மாற்றுச்சான்றிதழ் கொடுக்கணும்னா, எங்கள் துறை பேராசிரியர் பிரேம் குமாருக்கு ஆதரவாக கொடுக்கப்பட்ட மனுவினை வாபஸ் பெற்றால் தான், மாற்றுச்சான்றிதழ் தருவதாக மிரட்டினார். இதனால் நாங்கள் மீண்டும் துணை வேந்தரை அலுவலகத்தில் சென்று பார்க்க போன போது, அவர் எங்களை பார்க்க மறுத்துவிட்டார். இதனால் கல்லூரி பதிவாளரிடம் சென்று கேட்டபோது அவர், `நீங்கள் துறை தலைவரை சென்று பாருங்கள். அவர் சொன்னாதான் நான் மாற்றுச்சான்றிதழ் வழங்க முடியும்’ என்று எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நாங்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்க மீண்டும் பல்கலைக்கழகம் சென்றோம். அப்போது எங்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழில் நடத்தைப் பகுதியில் ’திருப்தி இல்லை’ என எழுதப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சிக்குள்ளானோம். பின்னர் அதனை வாங்க மறுத்து விட்டோம்” என்றனர்.
ஓராண்டுக்கு முன்னர், ஒரு புகாரில் குறிப்பிட்ட பேராசிரியருக்கு ஆதரவாக மனு கொடுத்த காரணத்துக்காக மாணவர்கள் தற்போது அலைகழிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இதில் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஆபத்தும் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் நடந்த விவகாரத்தை எங்களது அனுமதி இல்லாமல் பத்திரிகை ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இது நன்னடத்தை தொடர்பானது. இதுதொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று முடித்துகொண்டார்.