புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணைமுதல்வரான மணீஷ் சிசோடியா மீது அம்மாநில அரசாங்கத்தின் கருத்து பிரிவு (ஃபிட்பேக் யூனிட்) தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் கருத்து பிரிவால் அரசு கருவூலத்திற்கு ரூ.36 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஃப்பியூ எனப்படும் ஃபிட்பேக் யூனிட் என்பது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஏற்கனவே வேறொரு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியா மீது பதியப்பட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
இதுகுறித்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”மணீஷ் மீது பல பொய் வழக்குகளை பதிந்து அவரை நீண்ட காலம் காவலில் வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். நாட்டிற்கு இது வருத்தம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் சிபிஐ தனது அறிக்கையில் மணீஷ் சிசோடியா எஃப்பியூ-வை அரசியல் சூழ்ச்சிக்கான ஒரு கருவியாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தது. முன்னதாக டெல்லி அரசுத்துறை மூலமாக “அரசியல் புலனாய்வு” செய்தது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமை மீது விசாரணை நடத்த மத்திய அரசு சிபிஐ-க்கு அனுமதி வழங்கியிருந்தது. ஆம் ஆத்மி மற்றும் மணீஷ் சிசோடியா மீதான இந்த நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்திருந்தார்.
டெல்லியின் முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா, கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ-ஆல் கடந்த பிப்.26 ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.