பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் நரங், தமிழில் `என் சுவாச காற்றே’, `நெஞ்சினிலே’, `ஜோடி’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் பிரபலமாக அறியப்பட்டவர். 46 வயதான இவர், தற்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலையையும் சமமாகக் கையாண்டு வருவதோடு தினமும் உடற்பயிற்சி செய்யவும் தவறுவதில்லை.
இந்த நிலையில், `உங்கள் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என சமீபத்திய பேட்டியில் இஷா பேசியிருப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது.
இந்தியா டைம்ஸ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இப்போதெல்லாம் 20 வயது பெண்கள் கூட தங்களை அழகுபடுத்திக் கொள்ள அறுவை சிகிச்சைக்குச் செல்கிறார்கள். வயதானதைத் தாமதப்படுத்தும் முயற்சியில் பெண்கள் தங்கள் சருமத்தில் பயன்படுத்தும் அனைத்து விஷயங்களையும் பார்க்கும்போது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. உங்கள் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு படத்துக்காக எனது முகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்குமாறு என்னிடம் கேட்டனர். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். என் மூக்கில் மச்சம் இருப்பதால் என்ன தவறாகிவிடும்? கடவுள் ஏதோ ஒரு காரணத்துடன்தான் என்னை இப்படி படைத்துள்ளார் அதை எதிர்த்து நான் விளையாட விரும்பவில்லை. நான் படைக்கப்பட்ட விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “முன்பு இருந்த நடிகைகள் தங்களது ஹீரோ மற்றும் இயக்குநரின் ஈகோவுக்கு ஆளாக வேண்டி இருந்தது. ஆனால் இன்றைய தலைமுறை என்பது முழுவதும் வணிகமாகிவிட்டது. திறமையிருந்தால் மட்டும் போதும். இது மிகவும் வரவேற்க வேண்டிய நல்ல விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.