நாமக்கல் நகரில், பேருந்து நிலையத்தையொட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆஞ்சநேயருக்கு இந்தியா முழுக்க பக்தர்கள் உள்ளனர். நாள்தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினசரி சுவாமிக்குக் காலை 8 மணிக்கு வடை மாலை அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்குத் தங்கக்கவசம், வெள்ளிக்கவசம், புஷ்ப அங்கி, வெற்றிலை அலங்காரம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் மதிய வேளையில் நடைபெறும்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த விநாயகர் பெருமானுக்கு மாதந்தோறும் சதுர்த்தியிலும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயக சதுர்த்தி நன்னாளிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இத்த்கைய சிறப்புகளையுடைய இந்தத் திருக்கோயிலில் பங்குனி மாதம் முதல் தேதி மற்றும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆஞ்சநேயருக்கு விலை உயர்ந்த முத்துக்களால் தொடுக்கப்பட்ட முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள்
“வழக்கமாக நாமக்கல் தலத்தின் நாயகனான அனுமனுக்கு பிரமாண்டமான துளசி மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. அதேபோல, வெற்றிலை மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. அனுமனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இந்தத் துளசியையும் வெற்றிலையையும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
வெற்றிலையும் துளசியும் பிரசாதமாகப் பெற்று அனுமனை தரிசித்துப் பிரார்த்தித்தால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும் என்பது நம்பிக்கை. அதேபோல், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. எல்லாவற்றையும்விட, நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவையில் தரிசிப்பது ராஜயோகம் தரும். ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்துவதாகவும், முத்தங்கி சேவை செய்வதாகவும் வேண்டிக்கொள்ளூம் பக்தர்களும் உண்டு. முத்தங்கி சேவையில் அனுமனைத் தரிசிப்பது மகத்தான பலன்களைக் கொடுக்கும். நாமக்கல் அனுமனை தரிசனம் செய்தால் சனி பகவானின் கோபத்தில் இருந்தும் தாக்கத்தில் இருந்தும் அவர் நம்மைக் காத்தருளுவார்” என்கின்றனர் பக்தர்கள்.