நியூசிலாந்தில் 7.1 ரிக்டரில் நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை- மிரண்டு போன மக்கள்!

உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அதில் துருக்கி, சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்தது. இதையொட்டி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதிலிருந்து மீள்வதற்குள் அதே பகுதியில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு கலக்கமூட்டியது. இந்தியாவிலும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வை அவ்வப்போது உணர முடிகிறது. இதனால் 2023 இயற்கை சீற்றங்களின் பாதிப்பு தொடர் கதையாகுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கெர்மடெக் தீவுகள்

இந்நிலையில் நியூசிலாந்தின் நாட்டின் தெற்கு கெர்மடெக் தீவுப் பகுதியில் இன்று (மார்ச் 16) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது. கெர்மடெக் தீவுகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் இருந்து வடகிழக்கில் அமைந்துள்ளது. சுமார் 13 சதுர மைல் அளவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.

இங்கிலாந்து மக்கள் ஆனந்த கண்ணீர்; அப்படி என்ன செய்தான் திருடன்.?

ஆட்டம் கண்ட நியூசிலாந்து

இந்நிலையில் USGS எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வகம் வெளியிட்ட தகவலின்படி, பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தரைப்பகுதி ஆட்டம் கண்டது. அடுத்த சில நிமிடங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கெர்மடெக் தீவுகளில் சில கடலோரப் பகுதிகளில் மட்டும் 0.3 மீட்டர் முதல் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் மேலெழும்பக் கூடும்.

சுனாமி எச்சரிக்கை

ஃபிஜி, நியூசிலாந்து, டாங்கா ஆகிய தீவுகளில் 0.3 மீட்டருக்கு குறைவாகவே அலைகளின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்பட்டது. இருப்பினும் 300 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதேசமயம் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

அடுத்த கட்ட போருக்கு தயாராகும் சீனா; இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை.!

நியூசிலாந்து நிலநடுக்கம்

ஆனால் தற்போது நிலைமை சீரடைந்ததை அடுத்து சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நியூசிலாந்து சிவில் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெற்கு கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அச்சம் ஏற்பட்டது. தற்போது அதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

எரிமலை தீவுகள்

இதற்கிடையில் ஆஸ்திரேலிய நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கெர்மடெக் தீவுப் பகுதிகளில் 6.8 ரிக்டர் அளவில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. நியூசிலாந்து தீவுக் கூட்டங்களை பொறுத்தவரை எரிமலைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். இருப்பினும் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் சற்றே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.