லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீஸார் கைது செய்வதற்கு இன்று காலை 10 மணி வரை தடை விதித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்ததாக தொடரப் பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸார் நேற்று லாகூரில் உள்ள இம்ரான் கான் இல்லத்துக்கு கைது செய்ய வந்தபோது, அங்கு கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
இம்ரான் கான் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே கலவரமான சூழல் ஏற்பட்ட நிலையில், நாளை காளை 10 மணி வரை இம்ரான் கானை கைது செய்ய தடை விதித்து லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வீட்டுக்கு வெளியே வந்த இம்ரான் கான், அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ இம்ரான் கானுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்குடன் வந்த போலீஸாருக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து பின்வாங்க செய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.