புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக, 8ம் வகுப்பு வரை 11 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் சமீபகாலமாக வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது.
எனவே, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலம் முழுதும் ஆரம்பப் பள்ளி முதல், 8ம் வகுப்பு வரை 16ம் தேதி (இன்று) துவங்கி, வரும் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
பின், அமைச்சர் அளித்த பேட்டியில், ‘புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 18 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக முதல்வருக்கு, சுகாதாரத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளனது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement