பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் பட்டாசு உற்பத்தியும் நடந்து வருகிறது. மேலும் தயார் செய்யப்பட்ட பட்டாசுகளும் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பழனியம்மாள்(60), முனியம்மாள்(50), சிவாலிங்கம் ஆகியோர் குடோனுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். காலை சுமார் 10.30மணியளவில் திடீரென குடோனில் வைத்திருந்த பட்டாசுகளில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் அதிக சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், முனியம்மாள், சிவாலிங்கம் ஆகியோர் குடோனை விட்டு வெளியேற முயன்றார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே குடோன் முழுவதுமாக எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பழனியம்மாள், முனியம்மாள் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உடல் சிதறி இறந்து கிடந்த பழனியம்மாள், முனியம்மாளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீக்காயங்களுடன் படுகாயமடைந்த சிவாலிங்கமும் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணன் அனுமதியுடன் பட்டாசு குடோன் வைத்துள்ளாரா, தீவிபத்திற்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.