ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லை பகுதியில் பன்னார் கட்டா வனப்பகுதி உள்ளது. இப்பகுதியையொட்டி கக்கலி புரா என்ற இடத்தில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் மையம் உள்ளது. இப்பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக இங்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கி உள்ள பயிற்சி மையத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது பயிற்சி மையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரை காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காட்டு யானை தாக்கி உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.