ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளா?! – மறுத்த மத்திய அமைச்சர்

மொபைல்போன் விற்பனையில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. பேருந்துகள், ரயில்கள், சாலைகள், உணவகங்கள் என எங்கும் ஸ்மார்ட்போன் இல்லாத கைகளை காண்பதே அரிதாகிவிட்டது. சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களே பெரிதும் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக சீனாவின் ஷியோமி, விவோ, ஓப்போ ஆகிய 3 நிறுவனங்களே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான சந்தையை ஆக்கிரமித்துள்ளன. பொதுவாக ஸ்மார்ட்போன்கள் வருகை உலகில் பல புதுமைகளை நிகழ்த்தியிருக்கிறது, உலகத்தொடர்பை கைக்குள் கொண்டு வந்திருக்கிறது என பல்வேறு பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தாலும், அதன் பாதுகாப்பு குறித்த அச்சமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்

மொபைல்களை ஹேக் செய்து தகவல்களை திருடும் போக்குதான் அந்த அச்சத்திற்கு மிக முக்கிய காரணம். இதிலிருந்து பயனாளிகளைப் பாதுகாக்க பல்வேறு சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டாலும் அதனையும் மீறி தகவல் திருட்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் குறிவைத்து உளவு பார்க்கப்படும் சம்பவங்களும், அதுகுறித்த செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு கடிவாளம் போடும் வகையில் மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்கவிருப்பதாகத் தகவல் பரவியது. நாம் ஸ்மார்ட்போன் வாங்கும்போதே அதில் inbuild வகையில் பல செயலிகள் இருக்கும். அந்த செயலிகளை நம்மால் அழிக்க முடியாது.

அதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியர்களின் மொபைல் பண்பாட்டை கண்காணித்து உளவு பார்க்க முடியும் என்ற அச்சம் இருந்துகொண்டு இருக்கிறது. அதனால் இனி inbuild செயலிகளையும் தேவைப்படாவிட்டால் அழிக்கும் வகையில், ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டுமென்று மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக ராய்டர்ஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டது.

“மென்பொருள் இயங்குதளங்களை புதுப்பிக்கும்போது மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வகத்தில் ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்” உள்ளிட்ட கெடுபிடிகள் மத்திய அரசால் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் இந்த பாதுகாப்பு சோதனைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் இருவர் அளித்த தகவலின் அடிப்படையில், இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

பயனாளர்களின் பாதுகாப்புக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் இச்செய்தியைப் பகிர்ந்தனர். இந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வரிசைகட்டி வெளியேறத் தொடங்கிவிடும் என சர்வதேச அளவில் இது பேசுபொருளானது. இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரக்சேகர் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், “இந்தக் கதை முற்றிலும் தவறானது. இதுபோன்ற பரிசோதனை அல்லது கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. மொபைல் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் நடந்துவரும் ஆலோசனையை வைத்து, தவறான புரிதல் அல்லது கற்பனையின் அடிப்படையில் இச்செய்தி பரப்பப்பட்டிருக்கிறது. தொழில் தொடங்குதலை எளிமையாக்குதலில் மத்திய அரசு 100% உறுதி பூண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மின்னணு உற்பத்தியை 300 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டுமென்ற இலக்கோடு மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

எனினும் மொபைல், இணைய பாதுகாப்புக்கான வலுவான கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.